ஈராக் : ஷியா – அஹ்லுஸ் சுன்னா மோதல் திட்டமிட்ட சதி
மௌலவி
அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,
(வைகறை வெளிச்சம் மாத இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)
சிரியாவில் பஷார் அசத் இன் ஆட்சிக்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் தீவிர
ஸலஃபி அமைப்புகளில் ஒன்று ‘தவ்லதுல் இஸ்லாமிய்யா ஃபில் இராக்கி வஷ்ஷாம்’ ( ஆங்கிலத்தில் சுருக்கமாக ஐ.எஸ்.ஐ.எஸ்) எனும்
அமைப்பாகும்.
இவ்வியக்கம் கடந்த (ஜுன்) மாதம் 10 ஆம் தேதி ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மூஸல் நகரை
கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த போரில் திக்ரித், மற்றும் சில நகரங்களும்
கைப்பற்றப்பட்டன.
மூஸல் நகரில் உள்ள துருக்கி தூதரகத்தை கைப்பற்றிய அவ்வியக்கத்தினர் தூதரக
அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட 80 துருக்கி மக்களை கடத்திச்
சென்றார்கள்.
அவ்வாறே நமது இந்தியத் தொழிலாளர்களில் 40 பேரும் கடத்திச் செல்லப்பட்டனர். (பின்னர்
இவர்கள் விடுவிக்கப்பட்டனர்)
ஜாஹிலிய்யா கால இனவெறி
இன, மொழி, நிற , நில அடிப்படையிலான இனவெறி ஜாஹிலிய்யா கால பழக்கங்களில்
ஒன்றாகும். ஒரு மனிதனின் இனம், அவன் பேசும் மொழி, அவன் வாழும் நாடு ஆகியன அவனின்
தனிப்பட்ட அடையாளங்களாக இருக்க முடியுமே தவிர அவற்றினால் அவன் பிறரை விட
உயர்ந்தவனாக ஆகிட முடியாது என்பதே இஸ்லாத்தின் கொள்கையாகும்.
வெவ்வேறு இயக்கங்களில் இருந்தாலும், வெவ்வேறு சித்தாந்தங்களில் நம்பிக்கை
வைத்திருந்தாலும் முஸ்லிம் என்ற அடிப்படையில் ஒருவர் மற்றொருவரை நேசிக்க வேண்டும்.
ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வின் மீதும், மறுமை
நாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவரின் பண்பாகும்.
இயக்கப் பற்று இயக்க வெறியாக மாறினாலோ, சித்தாந்த நம்பிக்கை சித்தாந்த
வெறியாக மாறினாலோ நிச்சயமாக அது ஜாஹிலிய்யா கால இனவெறி என்பதில் அணுவளவும்
சந்தேகமில்லை.
சுமார் பத்து இலட்சம் இஸ்லாமியர்கள் அகதிகள் ஆன பின்பும், உணவின்றி
பட்டினியால் இறப்போர் நித்தம் நித்தம் அதிகரித்தும் சிரியா போர் தொடர்கிறது எனில், இனவெறி என்பதைத்
தவிர அதற்கு வேறு காரணம் இல்லை.
அஹ்லுஸ் சுன்னா – ஷியா
சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் அஹ்லுஸ் சுன்னா, ஷியா என இரண்டு பிரிவினராக கணக்கிடப்படுகின்றனர். இதில்
அஹ்லுஸ் சுன்னாவே பெரும்பான்மையினர் ஆவர்.
அஹ்லுஸ் சுன்னாவில் எவ்வாறு நடுநிலைவாதிகள், ஸலஃபிகள், (கடந்த நூற்றாண்டில் இவர்கள்
வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்பட்டனர்) தீவிர ஸலஃபிகள் என பல்வேறு சித்தாந்தப்
பிரிவுகள் உள்ளதோ அவ்வாறே ஷியா பிரிவிலும் பல பிரிவுகள் இருக்கவே செய்கின்றன.
நடுநிலையான அஹ்லுஸ் சுன்னத் ஜமாஅத்தார்களின் கருத்து ஷியாக்கள் முஸ்லிம்களே
என்பதாகும். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ஷியா அறிவிப்பாளர்களின் நபிமொழிகளை தமது
நூலில் பதிவு செய்துள்ளார்கள். அவர்களை காஃபிர்களாகவோ, வழிகேடர்களாகவோ, பாவிகளாகவோ
கருதி இருந்தால் அவர்களின் நபிமொழிகளை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்திருக்க
மாட்டார்.
நடுநிலையான இவ்வணுகுமுறையின் அடிப்படையில் சுமார் ஆறு நூற்றாண்டுகள் ஆட்சி
செய்தார்கள் துருக்கி உதுமானிய கலீஃபாக்கள். உதுமானிய கிலாஃபத்தில் உள்துறை,
பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை என பல்வேறு முக்கியப் பொறுப்புகள்
ஷியாக்களுக்கு தரப்பட்டிருந்தன.
அடக்கஸ்தல இடிப்பு இஸ்லாமிய
அரசின் இலட்சியமா?
எகிப்தையும், சிரியாவையும் நபித்தோழர்கள் கைப்பற்றிய சமயத்தில் அங்கே
இருந்த அடக்கஸ்தலங்களை உடைக்கும் வேலையில் ஈடுபடவில்லை. அங்கே இருந்த மற்ற
மதத்தினரின் ஆலயங்களை இடிக்கும் பணிகளிலும்
ஈடுபடவில்லை.
எகிப்து பிரமிடுகள் என்பது சுமேரிய மன்னர்களின் அடக்கஸ்தலங்களே. அவை இன்று
உலக அதிசயங்களாக திகழ்கின்றன என்றால் நபித்தோழர்கள் அவற்றை சேதப்படுத்தவில்லை
என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும்.?
ஏனெனில், அடக்கஸ்தலங்களை இடிப்பதும், மதப் புனிதங்களை இழிவுபடுத்துவதும்
இஸ்லாமிய அரசின் நோக்கமல்ல..
இஸ்லாமிய நாடுகளில் குண்டுவெடிப்புகள்
இஸ்லாமிய நாடுகளில் இப்போது நாம் கேள்விப்படும் குண்டுவெடிப்புகள்
அனைத்தையும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. வும், அதன் கூலிப்படையினரும் தான் நடத்தி வருகின்றனர்.
ஷியா பள்ளிவாசலோ, அஹ்லுஸ் சுன்னா பள்ளிவாசலோ முஸ்லிம்கள் தொழும்
இறையில்லத்தில் குண்டு வெடிக்கின்றது என்றால் அல்லாஹ்வையும், மறுமை நாளையும்
அஞ்சும் ஒரு முஸ்லிம் அதனை செய்ய மாட்டான்.
அடக்கஸ்தலங்களில் குண்டு
வெடிப்புகளும் சூழ்ச்சிகளும்
நமது இந்தியாவில் அஜ்மீர் தர்காவில் ரமலான் மாதத்தில் குண்டு வெடிப்புகள்
நடத்தப்பட்டன. முஸ்லிம்களில் அடக்கஸ்தல எதிர்ப்பாளர்கள் இதனை செய்ததாக
பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. நாம் அதனை உடனேயே மறுத்தோம்.
தொடர்ந்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களும்
முஸ்லிம்கள். கைது செய்யப்பட்டவர்களும் முஸ்லிம்கள் என்றொரு நிலைமையை அரசு
இயந்திரம் ஏற்படுத்தியது.
ஆனால், உண்மையில் இந்துத்துவ அமைப்புகள் தான் அதனை நடத்தியிருந்தன. சாமியார்
அசிமானாந்தா வாக்குமூலத்தில் பின்னர் அது தெரிய வந்தது.
முஸ்லிம்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டினை மோதலாக மாற்றி
இரத்தங்களை ஓட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய எதிரிகளின் விருப்பம். இதற்காக அவர்கள்
பயன்படுத்தி வரும் உத்திகளுள் ஒன்று தான் ஷியா – அஹ்லுஸ் சுன்னா மோதலாகும்.
அஹ்லுஸ் சுன்னா புனிதத்தலங்களில் குண்டு வைத்து விட்டு ஷியா முஸ்லிம்கள்
மீது பழி போடுவதும், ஷியாக்களின் புனித்தலங்களில் குண்டு வைத்து விட்டு அஹ்லுஸ்
சுன்னா வின் மீது பழி போடுவதும் நடக்கின்றது எனில், அதன் பின்னணியில் குண்டு
வைத்தவர்கள் சி.ஐ.ஏ வினராக இருப்பார்கள். அல்லது அவர்களின் கூலிப்படையினர் ஆகத்
தான் இருப்பார்கள். இவர்களைத் தவிர உண்மையான முஸ்லிம்கள் நிச்சயமாக அதனை செய்ய
மாட்டார்கள்.
தரனி குண்டு வெடிப்பு
நபித்தோழர் சுஹைர் இப்னு கைஸ் (ரழி) அவர்கள் லிபியாவைக் கைப்பற்றிய வீரத் தளபதி
ஆவார். அவரின் அடக்கஸ்தலம் லிபியாவில் உள்ள தரனி நகரில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஜுலை ஏழாம் தேதி அவரின்
அடக்கஸ்தலத்தில் குண்டு வெடித்தது. (Source: http://www.tripolipost.com 09.07.12)
நபித்தோழரின் அடக்கஸ்தலம் இருந்ததால் அங்கிருந்த பள்ளிவாசலில் தொழுவது
ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வந்த சில ஸலஃபி குழுவினர் இச்செயலை செய்ததாக திரிப்போலி
போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்தது. (நிச்சயமாக இதுவும் முஸ்லிம்களின் செயலாக
இருக்காது)
நபித்தோழர்களின் மீது பற்றும் –மரியாதையும் வைத்திருக்கக்கூடிய முஸ்லிம்களை
இச்சம்பவம் சோகப்படுத்தியது. ஏற்கனவே அதற்கு சில மாதங்களுக்கு முன்பு 15 ஆம்
நூற்றாண்டில் லிபியாவில் ‘இஸ்லாத்தை புதுப்பித்தவர்’ என்று அறியப்படும் சூபி
அறிஞர் அப்துஸ் ஸலாம் அஸ்மர் அவர்களின் அடக்கஸ்தலம் உட்பட சில அறிஞர்களின்
அடக்கஸ்தலங்கள் தாக்குலுக்கு உள்ளாகி இருந்தன. (இதனையும் முஸ்லிம்களின் செயலாக
ஏற்பதற்கில்லை)
ஜிகாத் என்ற பெயரில் ஆயுமேந்திப் போராடும் சில குழுக்கள் சி.ஏ.ஐ. வால்
உருவாக்கப்பட்டவை என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
உண்மையில் ஸலஃபிகள் தான் அதனை செய்தார்களா? அல்லது அவர்களின் பெயரில்
அமெரிக்க கூலிப் படையினர் அதனை செய்தார்களா? அல்லது அவர்களே இப்பெரும் சதியில்
சிக்கிக் கொண்டார்களா? என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்.
எனினும் அச்சம்பவம், ஸலஃபிகளின் கையில் ஆட்சி – அதிகாரம் கிடைத்தால்
நபித்தோழர்களையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்றொரு அச்சத்தை ஏற்படுத்தவே
செய்தது.
அம்மார் இப்னு யாசிர் (ரழி)
இன் மீதான தாக்குதல்
‘தவ்லதுல் இஸ்லாமிய்யா ஃபில் இராக்கி வஷ் ஷாம்’ (ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பு வட
மத்திய சிரியாவின் ரக்கா நகரை கைப்பற்றியது. ரக்கா நகரில் தான் நபித்தோழர் அம்மார்
இப்னு யாசிர் (ரழி) அவர்களின் அடக்கஸ்தலமும், மூத்த தாபியீன்களில் ஒருவரான உவைஸ்
அல்கர்னி (ரழி) அவர்களின் அடக்கஸ்தலமும் உள்ளது.
அம்மார் (ரழி) ஏழாவது நபராக இஸ்லாத்தை ஏற்றவர். உவைசுல் கர்னி (ரழி) தமது
தாயாரின் பணிவிடைக்காக நபி (ஸல்) அவர்களின் சந்திப்பை இழந்தவர்.
இவ்விருவரும் அஹ்லுஸ் சுன்னா மற்றும் ஷியாக்களிடம் மதிப்பு மிக்க தலைவர்கள்
ஆவர். ஸிஃப்பீன் போர்க்களத்தில் அலீ (ரழி) அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த இவர்கள் இருவரும் அப்போரில்
ஷஹீதானார்கள். இவ்விருவரையும் சுவர்க்கவாதிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
ரக்கா நகரம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்த பின்பு கடந்த மார்ச் 11 ஆம்
தேதி அடையாளம் தெரியாத சில குழுக்களால் இவ்விருவரின் அடக்கஸ்தலங்களும்
சேதப்படுத்தப்பட்டன.
இது ஷியாக்களுக்கு மத்தியிலும், நடுநிலையான அஹ்லுஸ் சுன்னாவுக்கு
மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஷியாக்களின் புனிதப்போர் அறிவிப்பு
கடந்த (ஜுன்) மாதம் ‘தவ்லதுல் இஸ்லாமிய்யா ஃபில் இராக்கி வஷ் ஷாம்’
(ஐ.எஸ்.ஐ.எஸ்) போராளிகள் அமைப்பு ஈராக்கின் மீது போர் தொடுத்து, அதன் இரண்டாவது
பெரிய நகரமான மூஸல் நகரத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து திக்ரித், கிர்குக் நகரங்களை கைப்பற்றிய அவர்கள், பாக்தாதை
நோக்கி முன்னேறினார்கள். அமீருல் முஃமினீன் அலீ (ரழி) அவர்களின் அடக்கஸ்தலம்
ஈராக்கில் நஜஃப் நகரிலும், இமாம் ஹுசைன் (ரழி) அவர்களின் அடக்கஸ்தலம் கர்பலா
நகரிலும் உள்ளன.
இவ்விரு அடக்கஸ்தலங்களும் ஷியாக்கள் புனிதமாக கருதுபவை. இந்நகரங்கள்
கைப்பற்றப்பட்டால், இவ்விருவரின் அடக்கஸ்தலங்களும் சேதப்படுத்தப்படலாம் என்ற பீதி ஷியாக்களுக்கு
மத்தியில் ஏற்பட்டது.
கடும் அச்சத்தில் ஆழ்ந்த ஷியா மதத்தலைமை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் யுத்தம்
செய்வதைப் புனிதப் போராக அறிவித்தது. கடந்த 13.07.14 அன்று ஜும்ஆ உரையில், ஈரான்
ஷியா அறிஞர் அலீ சீஸ்தானி இவ்வாறு குறிப்பிட்டார்.
“ நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தினை எதிர்த்து போரிட வேண்டும். அது புனிதப்
போராகும். இதில் கொல்லப்படுபவர் ஷஹீத் ஆவார்.”
சீஸ்தானியின் அறிவிப்பை தொடர்ந்து ஈராக் ராணுவம் ஷியா பொதுமக்களுக்கு
ராணுவப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதனால், அஹ்லுஸ் சுன்னா – ஷியா இடையில் மிகப் பெரும்
இனவெறிப் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இனவெறி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த எர்துகானும் கர்ளாவியும்
ஷியா அறிஞர் அலீ சீஸ்தானியின் ஜும்ஆ உரைக்கு பின்பு ஈராக்கிலும், ஈரானிலும்
ஷியாக்களுக்கு மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஈரானியர்கள்
ஈராக்கில் நுழைய தயாரானார்கள்.
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான்,
குழு மோதலையும், சித்தாந்த மோதலையும் தடுத்து நிறுத்தும் பொருட்டு துருக்கியின்
நிலைப்பாட்டினை அறிவித்தார். தமது கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
“மூஸல் நகரத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ்
அமைப்பினர் அந்நகரில் இருந்த எங்களின் தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூதரகத்தை திறக்குமாறு கோரினார்கள். பின்பு தூதரக அதிகாரிகள் பிடித்துச்
செல்லப்பட்டுள்ளனர்.
அச்சமயத்தில் தூதரகப் பாதுகாப்பு பணியில் ஈராக் அரசின் சார்பில் யாரும்
இல்லை. ஈராக் அரசின் இச்செயலை ஏற்றுக் கொள்ள இயலாது.
அரசியலில் சித்தாந்த கண்கொண்டு நாங்கள் செயல்பட்டதில்லை. அண்டை நாடு என்ற
அடிப்படையில் ஈராக்குடன் நாங்கள் சுமூக உறவே வைத்திருந்தோம். ஈராக்கின் விஷயத்தில்
நாங்கள் சத்தியத்தின் அணியில் நிற்கிறோம்.
அலீ (ரழி) அவர்களையும், உமர் (ரழி) அவர்களையும் நாங்கள் பாகுபடுத்திப்
பார்ப்பதில்லை. இவ்வாறே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். ஆறு நூற்றாண்டு
கால எங்களின் ஆட்சியில் ஒவ்வொருவரையும்
அவரது சித்தாந்தப்படியே வாழச் செய்தோம்.
அலீ என்ற பெயரில் இருப்பவருக்கு ஆயிஷா என்ற பெயரில் இருப்பவர் மனைவியாக
இருப்பதை எங்களின் நாட்டில் அதிகம் காண இயலும். மேன்மை மிக்க அந்நபித்தோழர்கள்
இருவரையும் நாங்கள் உயர்வாக மதிப்பதே அதற்கு காரணம்.
கர்பலா துயரச் சம்பவத்தின் மூலம் நாங்கள் அதிகம் படிப்பனை பெற்றிருக்கவே
செய்கிறோம். அதனை நாங்கள் துயரச் சம்பவமாக கருதுகிறோம்.
இவ்வும்மத்தின் அருட்கொடையான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பேரனார் இமாம்
ஹுஸைன் (ரழி) அவர்களின் ஷஹாதத்தைப் பயன்படுத்தி பிரிவினை உண்டாக்குவதை ஒருக்காலும்
நாங்கள் செய்ததில்லை.
வேதனை மிக்க கர்பலா நிகழ்வை திரும்பத் திரும்பக் கூறி, அதன் மூலம் புதிய
புதிய உயிர்களை வெளியேற்றுவதை நாங்கள் செய்ததில்லை.
சித்தாந்தப் பார்வையை ஒதுக்கி விட்டு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்ன
அனைவரையும் முஸ்லிம்கள், முஃமின்கள் என்றே நாங்கள் கருதி வந்துள்ளோம்.
இப்பிராந்தியத்தில் பல நூற்றாண்டுகளாக அறிவு மற்றும் ஹிக்மத்தின் குரலாக
நாங்கள் ஒலித்துள்ளோம். உண்மை மற்றும் பொறுமையை அழைப்பு விடுத்திடும் சமுதாயமாகவே
இனி எக்காலமும் இருக்கவும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.” (அல்குத்ஸ் யு.கே. 17.06.14)
பதட்டத்தை தணித்தார் கர்ளாவி
சர்வதேச இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவியை தலைவராக கொண்டு இயங்கிடும் அமைப்பு சர்வதேச
இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு.
எல்லை மீறியோரின் செயல்களை நிராகரித்த இவ்வமைப்பு, ஈராக்கில் இப்போது
ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி அநியாயக்கார அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள எழுச்சி
என்று குறிப்பிட்டுள்ளது.
அவ்வமைப்பின் சார்பில் கடந்த ஜுன் 19 ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.
அது பின்வருமாறு,
“ ஈராக்கில் அஹ்லுஸ் சுன்னாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள பகைமையை தடுக்கவும்,
அஹ்லுஸ் சுன்னாவையும் பயங்கரவாதத்தையும் இரண்டையும் இணைப்பதை தடுத்திடவும்
இஸ்லாமிய நாடுகளும், அரபு நாடுகளும் முன்வர வேண்டும்.
ஈராக்கில் அஹ்லுஸ் சுன்னா மக்களுக்கு எதிரான அநியாயங்களும், ஆக்கிரமிப்புகளும்
அதிகளவில் நடந்துள்ளன. அநியாயம் அரங்கேறினால் அதனை எதிர்த்து மக்களின்
போராட்டங்களும் வெடிக்கவே செய்யும். இது யதார்த்தம். இதுவே ஈராக்கில் இப்போது
நடக்கின்றது.
ஆதலால், இஸ்லாமிய நாடுகளும், அரபு
நாடுகளும் அஹ்லுஸ் சுன்னாவுக்கு எதிராக கிளப்பி விடப்பட்டுள்ள பகைமைத் தீயை
அணைத்து, அந்நாட்டின் எல்லா மக்களுக்கும் எல்லா உரிமைகளையும் பெற்றுத் தர முன்வர
வேண்டும்.
அடக்குமுறைக்கும் ஒதுக்கி வைத்தலுக்கும்
எதிரான மக்கள் எழுச்சியை பயங்கரவாதத்துடன் இணைத்து களங்கப்படுத்துவதை
நாங்கள் நிராகரிக்கின்றோம்.
மக்களின் உரிமைப் போராட்டத்தையும், தமது செயல்கள் எல்லாவற்றிலும் எல்லை
மீறி நடக்கும் (ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பையும் இரண்டையும் சமப்படுத்திப் பார்ப்பது
சரியல்ல..
ஈராக் அரசின் அநியாயத்தையும், அடக்குமுறைகளையும் ஏற்காத ஈராக் மக்கள் ஈராக்கிய
நடைமுறைக்கு தீங்கிழைக்கும் பிரிவினரின் எல்லை மீறிய செயல்களையும் நிச்சயம்
ஏற்கமாட்டார்கள்.
சமாதானக் காலத்திலும், போர்க் காலத்திலும் இஸ்லாம் வகுத்துத் தந்தள்ள
ஒழுக்க நெறிகளையும், கொள்கைகளையும் கவனத்தில் கொள்ளாத அமைப்புகள்
கண்டனத்துக்குரியவை.
இப்போது தூண்டி விடப்பட்டுள்ள இனவெறியை அனைத்து ஈராக்கிய மக்களும்
ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். எல்லோரின் இரத்தங்களுக்கும், உடமைகளுக்கும்,
மானத்திற்கும் மதிப்பளித்து பாதுகாக்க வேண்டும். அதில் பிரிவினை காட்டக்கூடாது.
உடனே போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடங்க
வேண்டும். அதில், எல்லா தரப்பு மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட வழிவகை செய்யப்பட
வேண்டும்.
மோசமான இந்த ஆபத்துக்கு எதிராக ஷியாக்களும் – அஹ்லுஸ் சுன்னாவும்
ஒன்றிணைந்து நிற்பது ஷரிஅத் அடிப்படையிலான கடமை மட்டுமல்ல.. நாட்டிற்கு இப்போது
அவசியமானதும் கூட.
(அலீ சீஸ்தானியின் ஃபத்வாவை குறிப்பிட்டு) இனவெறியை தூண்டும் பேச்சுக்களையும்,
ஃபத்வாக்களையும் தயவு செய்து ஈராக் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதனால் பெரும்
தீங்கும், சமுதாயத்தின் சாபமும் தான் ஏற்படும்.” ( ரஃயுல் யவ்ம் 19.06.14)
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி,
பொதுப்செயலாளர் டாக்டர் அல்குர்ரத் தாகீ இணைந்து வெளியிட்ட இவ்வறிக்கை ஷியாக்களின்
கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்தது.
மறுநாள் 20.06.14 அன்று ஜும்ஆவில் பேசிய அறிஞர் அலீ சீஸ்தானி எல்லா
மக்களின் ஒற்றுமைக்கும் குரல் கொடுத்ததோடு, எல்லோரின் உரிமைகளையும் பேணிப்
பாதுகாக்கும் அரசு ஏற்பட வழி செய்யப்பட வேண்டும் என்று கூறி நூர் மாலிக்கி ஆட்சி
மாற்றப்படும் என்று சூசகமாக தெரிவித்தார்.
அமெரிக்காவை தடுத்து நிறுத்திய எர்துகான்
ஈராக் அரசும், ஈரானும் ராணுவத்தை அனுப்புமாறு கடந்த 18 ஆம் தேதி அமெரிக்காவுக்கு
கோரிக்கை வைத்துள்ள நிலையில், துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் ராணுவத்தை
அமெரிக்கா அனுப்பக்கூடாது என்றும், விமானத் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அதிபர்
ஒபாமாவிடம் உறுதியாக தெரிவித்து விட்டார்.
கடந்த 19 ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அமெரிக்கா ராணுவத்
தாக்குதலோ, விமானத் தாக்குதலோ நடத்தக்கூடாது. அது இப்பிராந்தியத்தில் வாழும்
அப்பாவி பொதுமக்களை பாதிக்கும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுடன் அஹ்லுஸ் சுன்னா பொதுமக்கள் கலந்துள்ளனர். விமானத்
தாக்குதல் நடத்தினால் அஹ்லுஸ் சுன்னா மக்கள் மட்டுமல்ல..ஷியா பொதுமக்களும்
பலியாவார்கள். விமானத்தில் இருந்து போடப்படும் குண்டுகள் இவர் அஹ்லுஸ் சுன்னாவா?
ஷியாவா? என்று பார்த்துப் போடப்படாது.” (http://www.dailysabah.com 19.07.14)
துருக்கி நேட்டோ அணியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய
ராணுவ வலிமையுள்ள நாடாகும். ஆதலால், துருக்கியின் எதிர்ப்பால் அமெரிக்கா ராணுவத்தை
அனுப்பும் திட்டத்தையும், விமானத் தாக்குதல் நடத்தும் திட்டத்தையும் கைவிட்டு
விட்டு சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாடுகளில் இறங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
எர்துகான் மற்றும் கர்ளாவியின் அறிக்கைக்கு பின்பு ஈராக் மற்றும் ஈரான்
ஷியா மத தலைவர்களும் இனவெறி பேச்சுக்களை கைவிட்டு விட்டு சமாதானப்
பேச்சுவார்த்தைகளுக்கு இசைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம்
தஃவாவின் ஊழியர்களே – எர்துகான் பேச்சு
துருக்கியில் கடந்த 28.06.14
(சனிக்கிழமை) ரமழான் முதல் நோன்பு தொடங்கியது. துருக்கியின் ‘ஒற்றுமை’ அறக்கட்டளை
ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துருக்கி பிரதமர்
டாக்டர் ரஜப் தய்யிப் எர்துகான் பேசியதாவது,
“நாம் தஅவாவின் ஊழியர்களாகவே
இருப்போம். அது பரக்கத்தானது. ஆதியில் அது தான் நிலை பெற்றிருந்தது. இப்போது வரை
அதுவே நீடித்தும் கொண்டிருக்கின்றது.
நமது எல்லா செயல்களையும், அமல்களையும்
சுயநல நோக்கமின்றி இக்லாஸானதாக ஆக்குவதில்
நாம் பேராசைப்பட வேண்டும்.
சூழ்நிலைகள், ஏற்றத்தாழ்வுகள்
அல்லாஹ்வால் விதிக்கப்பட்டவை. எக்காரணம் கொண்டும் வருங்காலத்தில் அல்லாஹ் நம்மை
கைவிட மாட்டான்.
நமது எதிரிகளும் நாமும்
வேதனைக்குரிய விஷயம் என்னவெனில்,
நம்முடைய முஸ்லிம் உம்மத்தை துண்டு துண்டாக கிழித்தெறிய முயற்சிப்பவர்களின்
முகத்திற்கு நேராக நிற்பதின் மீது நாம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
இத்தகையவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதும் கூட நமது
சமுதாயத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கின்றது. ஆம். நமது உம்மத்தை துண்டு துண்டாக
கிழித்தெறிய முயற்சிப்பவர்கள் இங்கேயே இருக்கின்றார்கள். எவ்வளவு பெரிய கைசேதம்
இது.
வரலாற்றில் மிக மோசமான
காலகட்டம்
இவ்வருடம் ரமழானில் நாம் நுழைந்துள்ளோம்.
இத்தகைய ஒரு காலகட்டத்தை இந்த உம்மத் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. அவ்வளவு
மோசமான காலகட்டம் இது.
முஸ்லிம் உம்மத்தின் வாழ்க்கையில்
பெரும் சோதனை ஏற்பட்டிருக்கின்றது. சங்கைக்குரிய இம்மாதத்தின் பரக்கத்தினால்
இவ்வும்மத்திற்கு நற்பாக்கியம் ஏற்படட்டுமாக!
இஸ்லாமிய உலகமும், அரபுலகின் சில
நாடுகளும் கடும் கஷ்டத்தில் சிக்கித் தவிக்கின்றன. அந்நாடுகளில் வாழும்
முஸ்லிம்களின் கஷ்டத்தையும், துன்பங்களையும் இந்த ரமழான் துருக்கி முஸ்லிம்களாகிய
நமக்கு உணர்த்த வேண்டும்.
ஏனெனில், தன்னையும், பிறரையும் அறிவதே
நோன்பின் நோக்கமாகும். ஏழைகள், எளியவர்களின் பசியையும், உணவின்றி அவர்கள் வாடுவதை
உணரவும் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
ஆதலால் உலகம் முழுவதும்
துன்பங்களில், துயரங்களில் வாழும்
இஸ்லாமியர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்னும் இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கையும்,
சிரியாவையும் அதிகம் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவ்விரு நாடுகளின்
வரலாற்றில் இது போன்ற மோசமான சூழ்நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.
அந்நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தி
அப்பாவிகளை கொலை செய்பவர்கள் பெருகி வருகிறார்கள். விளைவு அந்நாடே இரத்தக் குளமாக
காட்சியளிக்கிறது.
அந்நாடுகளில் இன்னொரு படையினர்
உள்ளனர். அவர்கள் பள்ளிவாசல்களை குண்டு வெடித்து தகர்க்கின்றனர். அவற்றின்
உயர்கோபுரங்களை இடித்துத் தள்ளுகின்றனர். மார்க்கத்தின் பெயரால் சிலர் சிலரை
கொன்று குவிக்கின்றனர்
அரபு நாடுகளில் இப்போது நேர்ந்துள்ள
இந்நிலைமைக்கு என்ன காரணம் தெரியுமா? தங்களை தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ளும்
மனநிலையும், செயல்களில் தாங்கள் செய்த தவறை சரிப்படுத்திக் கொள்ளும் முயற்சியும்
இல்லாமல் போனது என்றால் மிகையில்லை.
ஆம். தங்களின் ஆத்மாக்களின் மீது
கேள்விகளை கேட்காமல் இருப்பது எவ்வளவு கைசேதம். ஆபத்து
நம் மீதான பொறுப்புகள்
துருக்கி மக்களே.. உலகம் முழுவதும்
வாழும் முஸ்லிம்கள் துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். எகிப்து, சோமாலியா,
சிரியா, ஈராக், மியான்மர், ஆப்கானிஸ்தான், லிபியா நாடுகளில் வாழும் உங்களின்
சகோதரர்கள் அநியாயங்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.
நீங்கள் உதவி செய்வீர்கள் என்று
அவர்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய பொறுப்பை நாம்
சுமந்து நிற்கிறோம். இதனை நாம் உணர வேண்டும். நல்ல எதிர்காலத்தை அவர்களுக்கு நாம்
ஏற்படுத்தி தருவோம்.
இதற்கு முன்பு நாமும் துன்பங்களை
சந்திக்கவே செய்துள்ளோம். ஹாவியா எனும் நரகத்தின் அதள பாதாளத்தில் நாம் தள்ளி
விடப்பட்டிருந்தோம். அச்சமயத்தில் நாட்டை காப்பாற்றிட சில மனிதர்கள் கடுமையாக
போராடினார்கள். மேன்மை மிக்க அத்தலைவர்கள் நாட்டைக் காப்பாற்றிட தஃவாவின் வழியில்
இலக்கினை நிர்ணயித்து போராடினார்கள். அதனை அடைய எல்லா பாதைகளையும்
பயன்படுத்தினார்கள்.
யார் தஃவாவின் வழியை கைவிட்டு விட்டு
அதிகாரம் – பதவியின் வழியில் பயணிக்கிறார்களோ அவர்கள் சிரமங்களை சந்திப்பார்கள்.
அதே போன்ற உழைப்பும், போராட்டமும் மற்ற
நாடுகளில் துன்பப்படும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட நமக்கு இப்போது மீண்டும்
தேவைப்படுகின்றது. அதனை இந்நோன்பு நமக்கு தர வேண்டும்.”
இவ்வாறு எர்துகான் பேசினார். (
அனடோலியா செய்தி ஏஜென்சி)
.