இஸ்லாமிய கொள்கைகள் , கோட்பாடுகள் , பண்பாடுகள் ஆகியவற்றுக்கு சிறிதளவும் முரண்படாமல் முஸ்லிம்களுக்கு பயன் தந்திடக்கூடிய நிர்வாக முறைகள், செயல்பாடுகள் மாற்றார்களிடம் உள்ளன என வைத்துக் கொள்வோம்.

அவற்றை எடுத்து செயல்படுத்தலாமா? அது கூடுமா? என்றால், ‘அது கூடும்’ (ஜாயிஸ்) என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பின்வரும் இரண்டு நிகழ்வுகள் இதற்கு ஆதாரம்.

ஒன்று: நபி (ஸல்) அவர்கள் தமது கடிதங்களில் முத்திரை பதித்த நிகழ்வு . (ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு பின்பு) அரபுகள் அல்லாத ரோம் நாட்டைச் சேர்ந்த சில குழுவினருக்கு அல்லது மக்களுக்கு ‘இஸ்லாம்’ குறித்து கடிதம் எழுதிட நாடினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அப்போது அவர்களிடம் கூறப்பட்டது. “மன்னர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கடிதங்களை முத்திரையிட்டே அனுப்புவார்கள். முத்திரையிடப்பட்டு வரும் கடிதங்களையே ஏற்கவும் செய்வார்கள்”.

தோழர்களின் ஆலோசனையை ஏற்று, முஸ்லிமல்லாத அம்மன்னர்களின் நிர்வாகவியல் நடைமுறையை நபி (ஸல்) அவர்கள் அமல்படுத்தினார்கள்.

‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட மோதிரத்தினால் கடிதங்களில் முத்திரையிடத் தொடங்கினார்கள்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
لَمَّا أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ قِيلَ لَهُ إِنَّهُمْ لَا يَقْرَءُونَ كِتَابًا إِلَّا أَنْ يَكُونَ مَخْتُومًا فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ

                                            (காண்க :புகாரி 5872)
மற்றொன்று: சல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்களின் ஆலோசனையை ஏற்று ‘அஹ்ஸாப்’ போரில் நபி (ஸல்) அவர்கள் அகழி தோண்ட உத்தரவிட்டதாகும்.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அரபுலகமே திரண்டு வந்த ‘அஹ்ஸாப்’ யுத்தத்தில் பாரசீகர்களின் ‘தற்காப்பு பாணியை பின்பற்றலாம்’ என்றார்கள் நபித்தோழர் சல்மான் ஃபார்ஸி (ரழி).

அவரின் ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள். அகழி தோண்ட உத்தரவிட்டதோடு, தாமும் அப்பணியில் பங்கேற்றார்கள்.

படையெடுத்து வந்த குரைஷிகளும், கத்ஃபான் கோத்திரத்தார்களும் அகழியைப் பார்த்த இவ்வாறு சொன்னார்களாம். “இது குரைஷிகளின் போர் யுக்தி இல்லை.”

இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் மற்ற சமுதாயத்தினரின் ‘நிர்வாகவியல்’ நடைமுறைகளை இஸ்லாமிய அரசில் அமல்படுத்தியுள்ளார்கள்.

இராணுவ வீரர்களுக்கான பெயர்ப்பட்டியல் தயாரித்ததும், ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கியதும் அவற்றில் உள்ளவையே.

முன்வாழ்ந்த சமுதாயத்தவர்களின் ஷரிஅத்தும் நாமும்

இறுதி வேதமான திருக்குர்ஆனிலும், இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவிலும் பல இடங்களில் முன்வாழ்ந்த சமுதாயத்தவர்களின் ஷரிஅத் கூறப்பட்டிருக்கின்றது.

அதனை ஆதராமாகக் கொண்டு அதிலிருந்து நமது ஷரிஅத்திற்குரிய சட்டங்களை ஆய்வு செய்து எடுக்கலாமா? நமது ஷரிஅத் சட்டங்களுக்கு ஆதாரமாக முன்வாழ்ந்தவர்களின் ஷரிஅத்தை கருதப்படுமா? அல்லது கருதப்படாதா? என்பதில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு.

முன்வாழ்ந்த சமுதாயத்தவர்களின் ஷரிஅத்தை சுற்றி எழும்பும் இக்கருத்து வேறுபாடு உசூலிய்யீன்கள் எனும் ‘சட்ட அடிப்படை விதிகள் துறை’ வல்லுனர்களிடம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று தான்.

இது விஷயத்தில் ஏற்கத்தக்க கருத்து அதனை மாற்றிடும் எதுவும் நமது ஷரிஅத்தில் வரவில்லையெனில், அதனை ஆதாரமாக கொள்ளலாம் என்பதே.

ஏனெனில், அதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவே திருக்குர்ஆன் அதனை கூறியுள்ளது. அதனை ஆதாரமாக கொள்ளக்கூடாது  எனில், எதற்காக திருக்குர்ஆன் அதனை கூறியுள்ளது?

இது ‘அதனை ஆதாரமாக கொள்ளலாம்’ என்போரின் கருத்து. நிச்சயமாக இது ஏற்கத்தக்க கருத்தே…

முன்னோர்கள் குறித்த வசனங்களும் நமக்குரிய சட்டங்களும்

முன்வாழ்ந்த சமுதாயத்தவர்களின் வரலாறு , ஷரிஅத் குறித்து திருக்குர்ஆன் பல வசனங்களில் பேசுகிறது.

அவ்வசனங்களில் இருந்து நமது ஷரிஅத்திற்கு தேவையான சட்டங்கள் எவ்வாறு மார்க்க அறிஞர்களால் ஆய்வு செய்து எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு நான்கு இறைமறை வசனங்களை இவ்விடம் உதாரணத்திற்கு குறிப்பிடுவோம்.

(அ) நபி மூஸா (அலை) அவர்களை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் தமது தந்தையிடம் நபி ஷுஅய்பு (அலை) அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருவர் இப்படிக் கூறியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

قال الله تعالي: قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ


                                        (அல்குர்ஆன்: 28:26)

இங்கே இவ்வசனத்தில் நபி மூஸா (அலை) அவர்களை பணியமர்த்தும் விஷயத்தில் அவரிடம் காணப்பட்ட இரண்டு பண்புகளை தமது தந்தையிடம் எடுத்துக் கூறினார் நபி ஷஅய்பு (அலை) அவர்களின் புதல்வி.

ஒன்று; நம்பகம். மற்றொன்று; பலம்.

முன்வாழ்ந்த மக்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் இவ்வசனத்தில் இருந்து ‘இஸ்லாமிய சட்ட அடிப்படை விதிகள் துறை’ அறிஞர்கள் கூறுவார்கள்.

“அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு தேர்வு பெறுவோரிடம் அவ்விரண்டு பண்புகளும் அவசியம் இருக்க வேண்டும்.”

(ஆ) நபி மூஸா (அலை) அவர்கள் கிள்ரு (அலை) அவர்களை சந்தித்த பொழுது நடந்த சுவாரஸ்யமான சில நிகழ்வுகளை ‘கஹ்பு’ அத்தியாத்தில் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும்.

அந்நிகழ்வுகளில் ஒன்றில் கிள்ரு (அலை) அவர்கள் பயணம் செய்த கப்பலை ஓட்டை போட்டிருப்பார்கள். பின்பு அதற்கு இவ்வாறு காரணமும் கூறியிருப்பார்கள்.

“ஓட்டையிடப்பட்ட கப்பலை அரசன் அபகரிக்க மாட்டான். அதனால் தான் ஓட்டை போட்டேன்.”

இது குறித்த இறைமறை வசனம் பின்வருமாறு;

 قال الله تعالي: أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي الْبَحْرِ فَأَرَدْتُ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا
( அல்குர்ஆன் 18:79)


                                              
நல்ல கப்பலாக இருப்பின் அதனை அந்த அரசன் ஒரேயடியாக அபகரித்து விட்டுப் போய் விடுவான். ஒட்டை போட்டால், அதனால் அதற்கு சேதம் ஏற்பட்டாலும் அபகரிப்பினை விட்டும் தப்பி விடும் என்பதே இவ்வசனத்தின் விளக்கம்.

முன்வாழ்ந்தவர்களின் வரலாற்றைக் கூறும் இவ்வசனத்தில் இருந்து இஸ்லாமிய ‘ சட்ட அடிப்படை விதிகள் துறை’ அறிஞர்கள் பின்வரும் சட்ட விதியொன்றைக் கூறுவார்கள்.

“இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதெனில், அவ்விரண்டில் இலகுவானதை தேர்ந்தெடுக்கப்படும்.”

(இ) எகிப்து நாட்டு அரசர் கண்ட கனவுக்கு நபி யூசுஃப் (அலை) அவர்கள் தந்த விளக்கத்தை எடுத்துரைக்கும் வசனத்தையும் இதற்கு ஆதாரமாக கூறலாம். அவ்வசனம் பினவருமாறு:
قال الله تعالي: قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ

                                              (அல்குர்ஆன் 12:47)

நபி யூசுஃப் (அலை) அவர்கள் முன் வாழ்ந்த நபிமார்களில் ஒருவர். மேற்கண்ட வசனத்தில் இடம்பெற்ற சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.

நமக்கும் – அதற்கும் வெகுதூரம் என்றாலும் திருக்குர்ஆனில் அது இடம் பெற்றதால் அதில் இருந்து நமது ஷரிஅத்துக்கு தேவையான ஆய்வு சட்டங்களை இஸ்லாமிய அறிஞர்கள் அகழ்ந்தெடுத்துள்ளார்கள்.

பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இவ்வசனத்தின் விரிவுரையில் கூறியிருப்பதாவது:
“மதங்கள் , உயிர்கள் , சிந்தனைகள், வம்சங்கள், பொருளாதாரங்கள் ஆகியவற்றை பாதுகாத்தல் ‘ஷரிஅத் சீர்திருத்தங்களே’ எனும் கூற்றுக்கு இவ்வசனமே ஆதாரம்.

ஆதலால், மேற்கண்ட (மதங்கள், உயிர்கள், சிந்தனைகள், வம்சங்கள், பொருளாதாரங்கள் ஆகிய ) அவற்றில் ஒன்றை அடைந்திட துணை செய்யும் ஒரு செயல் சீர்திருத்தமாகவும், அவற்றில் ஒன்றை பாழாக்கும் செயல் சீர்கேடாகவும் அதனை தடுத்து நிறுத்திடும் பணி சீர்திருத்தமாகவும் கருதப்படும்.

ஏனெனில், அல்லாஹ்வை அறிவதுடன் மறுமையில் வெற்றியை வசப்படுத்தி தரும் உலகியல் நன்மைகளை மக்களுக்கு வழிகாட்டுவதே மதங்களின் நோக்கம். இதில் சந்தேகம் இல்லை.”     (நூல் ; தஃப்ஸீர் குர்துபி)Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.