மனித இனத்துக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மார்க்கம் இஸ்லாமே.

உலகில் எத்தனையோ மதங்கள் ,கொள்கைகள், கோட்பாடுகள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு தகுதியான வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தையே அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.
قال الله تعالي :إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ  3:19

قال الله تعالي : وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآَخِرَةِ مِنَ الْخَاسِرِينَ 3:85

மனிதன் கண்ணியமானவனாகவும், பண்பானவனாகவும், ஒழுக்கமானவனாகவும், நேர்மையானவனாகவும், இன்னும் சொல்வதெனில், மனசாட்சியுள்ள மனிதனாகவும் வாழ வேண்டுமானால் மனித வாழ்க்கைக்கு கண்டிப்பாக இஸ்லாம் தேவையே

ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். இஸ்லாம் இன்றி மனித சமூகத்தால் நேர்மையாகவோ , ஒழுக்கமாகவோ வாழ முடியாது.

ஏனெனில் , இஸ்லாமே மனிதர்களை நெறிப்படுத்துவற்காக அல்லாஹ் அங்கீகரித்த வாழ்க்கை நெறியாகும் . மனித சமூகத்தின் பூர்வீக மதமும் இஸ்லாம் தான்

உலகில் மனிதர்களை நெறிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களும் முஸ்லிம்களாகவும் , இஸ்லாத்தை மக்களுக்கு போதிப்பவர்களாகவும் இருந்தனர்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிமாகவே இருந்தார்கள்.
قال الله تعالي : مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ 3:67

இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் யஅகூப் (அலை) அவர்கள் தங்களின் பிள்ளைகளை முஸ்லிம்களாக வாழுமாறு போதித்தார்கள்.

قال الله تعالي : وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ   2:132

நபி மூஸா (அலை)அவர்களின் மார்க்கமும் இஸ்லாமே

قال الله تعالي : وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آَمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ 10:84

நபி ஈஸா (அலை) அவர்களின் தோழர்கள் முஸ்லிம்களே

قال الله تعالي : قَالُوا آَمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ 5:111

இறைநெறியை இவ்வுலகிற்கு போதிக்க அனுப்பப்பட்ட முந்தைய இறைத்தூதர்களின் வழியில் இறைத்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இஸ்லாத்தையே அரபுகளுக்கு போதித்தார்கள்.

சமூக அவலங்களுக்கு இஸ்லாமே தீர்வு

அன்றைய அரபுலகில் மக்களின் இரத்தத்தோடு ஊறிப்போயிருந்த எல்லா வகையான ஒழுக்கக் கேடுகளையும், சமூக அவலங்களையும் இஸ்லாத்தின் மூலம் தான் அண்ணல் நபி(ஸல்) ஒழித்துக் கட்டினார்கள்.

ஆம்.. இருளில் இருந்து மக்களை வெளிச்சத்தை நோக்கி கொண்டு வரவும், ஜாஹிலிய்யா ஒழுக்கக் கேடுகளில் இருந்து காப்பாற்றி மக்களை பண்பாடான வாழ்க்கைக்கு மாற்றவும் இஸ்லாத்தை நபி (ஸல்) தீர்வாக ஆக்கினார்கள் .

قال الله تعالي : لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ 14:1

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பின்பு சங்கைக்குரிய சஹாபாக்களும் சமூக அவலங்கள் மற்றும் ஒழுக்கக் கேடுகளை இக்கண்ணோட்டத்தில் தான் அணுகினார்கள்.

வெற்றி பெற்ற நாடுகளில் வாழ்ந்த மக்களின் குணநலன்கள், ஒழுக்க நெறிகள், பண்பாடுகள் மிகவும் நலிவுற்றிருந்ததை கண்டு வருத்தமடைந்த சஹாபாக்கள் அவற்றை சீர்செய்திட இஸ்லாத்தையே அம்மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.

தனி மனிதன் சுவர்க்கம் செல்வது மட்டுமன்றி ஒரு சமூகம் கண்ணியமான சமூகமாக ஆகிடவும் ,அவ்வாறே  ஒரு நாடு கண்ணியமான நாடாக ஆகிடவும் இஸ்லாம் அந்நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.

ஆதலால் தான் , நபித்தோழர்களும், தாபியீன்களும் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அவ்வளவு ஆர்வம் செலுத்தினார்கள்.

இஸ்லாத்தை அந்த மக்கள் ஏற்றால் அதற்காக எதையும் இழப்பதற்கும் தயாராக இருந்தார்கள் அந்த பெருமக்கள்.

வரலாற்று வானில் ஜொலிக்கும் பின்வரும் நிகழ்வு இதற்கு உதாரணம்.

 عن زياد ابن زبيدي قلال :فبعث عمرو إلى صاحب الإسكندرية يعلمه الذي كتب به أمير المؤمنين. قال: فقال: قد فعلت. قال: فجمعنا ما في أيدينا من السبايا، واجتمعت النصارى، فجعلنا نأتي بالرّجل ممن في أيدينا، ثمّ نخيّره بين الإسلام وبين النصرانيّة؛ فإذا اختار الإسلام كبّرنا تكبيرة هي أشدّ من تكبيرتنا حين تفتح القرية؛ قال: ثم نحوزه إلينا، وإذا اختار النصرانيّة نخرت النصارى، ثم حازوه إليهم، ووضعنا عليه الجزية، وجزعنا من ذلك جزعا شديدا؛ حتى كأنّه رجل خرج منا إليهم
( تاريخ الطبري)

“இஸ்கந்தரிய்யா நகர் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் கடிதத்தை எகிப்து கவர்னர் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் படைத் தளபதிக்கு கொடுத்தனுப்பினார்கள்.
அதன்படி மக்களை ஒன்று திரட்டப்பட்டது. கைதிகளும், கிறிஸ்தவர்களும் ஓரிடத்தில் குழுமினார்கள். முஸ்லிம்களும் அவ்விடம் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒவ்வொருவரிடமும் இஸ்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது. அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தால் முஸ்லிம்கள் அவ்வூரை கைப்பற்றும் சொன்ன தக்பீரை விட உற்சாகமாக உயர்ந்த குரலில் தக்பீர் முழங்குவார்கள்.
அதே நேரத்தில் அவர்களில் ஒருவர் கிறிஸ்தவத்தில் நீடித்திருப்பதை தேர்ந்தெடுத்து விட்டால் அவரின் மீது ஜிஸ்யா விதித்தாலும் முஸ்லிம்கள் தங்களில் ஒருவர் தங்களை விட்டும் பிரிந்து போவதாக கவலைப்படுவர்.”

கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தால் அவர்களின் மீது ஜிஸ்யா விதிக்கப்படும். அது இஸ்லாமிய அரசுக்கு வருமானம் தான். அது போனாலும் பரவாயில்லை. இஸ்லாத்துக்கு அவர்கள் வந்திட வேண்டும் என்றே அக்கால முஸ்லிம்கள் விரும்பினார்கள்.

கற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா

இங்கே நமது இந்தியா ஒழுக்க கேடுகளிலும், பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்கித் தவிக்கிறது.

சமீபத்தில் தில்லியில் பேருந்து ஒன்றில் பெண் கற்பழிக்கப்பட்ட செய்தி இந்தியாவை உலுக்கியது.

ஐந்து வயது சிறுமி முதல் எழுபது வயது பாட்டி வரை வன்மமான முறையில் கற்பழிக்கப்படும் ‘கற்பழிப்பு தேசமாக’ இந்தியா மாறியுள்ளது.

National Crime Records ன் படி இந்த வருடம் இம்மாதம் டிசம்பர் வரை நாடு முழுவதிலும்  2,56,329 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றதாம்.

அதில் 2,28,650 குற்றங்கள் பெண்களுக்கு எதிரானது தாம். அதிலும் 26% கற்பழிப்பு குற்றங்களாம். (source: வெளிநாட்டு நாளிதழ் ஒன்று) (எனது பேஸ்புக் தளத்தில் இச்செய்தியை வெளியிட்டு பத்திரிக்கை லிங்க் கொடுத்துள்ளேன்)

வெளிநாட்டு முன்னணி பத்திரிக்கைகள் ‘இந்தியாவில் கற்பழிப்பு கூக்குரல்கள்’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கும் பொழுதெல்லாம் மக்கள் தரப்பில் இருந்து இரண்டு கோரிக்கைகள் எழும்பும்.

ஒன்று: பெண்கள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும்.

மற்றொன்று: கடுமையான சட்டங்களை இயற்றி, கற்பழிப்பில் ஈடுபடுவோர்க்கு கடும் தண்டனை தர வேண்டும்.

இவ்வாறான நேரங்களில் சிலர் அதிகபட்சமாக மரண தண்டனை தர வேண்டும் என்றும், இன்னும் சிலர் இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போன்று மரண தண்டனை என்றும் சொல்வதுண்டு.

பொதுவாகவே மக்கள் இஸ்லாம் என்றாலே கைவெட்டு, கால்வெட்டு. தலைவெட்டு என்று விளங்கி வைத்துள்ளார்கள்.

இது மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்துள்ள கற்பனை பிம்பமாகும்.

மேற்கூறப்பட்ட அம்மூன்றும் இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களின் ஒரு பகுதி தானே தவிர அம்மூன்றும் மட்டுமே ஷரிஅத் சட்டங்கள் அல்ல.. அவ்வாறே அம்மூன்றும் மட்டும் இஸ்லாமும் அல்ல..

சிலர் நினைப்பது போன்று இந்திய மக்களின் வாழ்க்கை நெறி மாறாமல் அம்மூன்றையும் இந்திய குற்றவியல் சட்டங்களில் சேர்த்தாலும் குற்றங்கள் ஒன்றும் குறைந்தும் விடாது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு.

கள்ளன் பெரியவனா
காப்பான் பெரியவனா
கள்ளன் தான் பெரியவன்

நம்மை பொருத்தவரை இந்திய மக்களின் வாழ்க்கை நெறி மாறாமல் எத்துணை கடுமையான, மரண தண்டனையை விட கொடிய  தண்டனையை கொண்டு வந்தாலும் சரி இந்த அவலங்களை தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில், கற்பழிப்பு நடந்த டெல்லியில் இரவு 8.00 மணிக்கு மேல் பெண்களை வைத்து ஒரு நிறுவனம் வேலை  வாங்க வேண்டுமெனில்,அந்நிறுவனம் தொழிலாளர் நலத்துறையிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் எனும் விதிமுறை உள்ளது.

அது மட்டுமல்ல.. நமது இந்திய தேசத்தில் எல்லா மாநிலங்களிலும் பெண் போலிசார் இருக்கவே செய்கின்றனர்.

பீச், பார்க், மார்க்கெட் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் எல்லா பகுதிகளிலும் பெண் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவே செய்கின்றனர்.

அரசாங்கம் முடிந்தளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தான் உள்ளது.

அதற்காக ஒவ்வொரு பெண்ணுக்கும்  ஒரு போலிஸ் என்ற விகிதத்தில் எந்த நாட்டிலும் பாதுகாப்பு தர முடியாது.

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சுயமாக அவன் திருந்தாத வரை யாராலும் அவனை திருத்தி விட முடியாது.

அவ்வாறே சுயகட்டுப்பாட்டுடன் மனிதர்கள்
ஒழுக்கமாக இருக்காத வரை சமூகத்தில் ஒழுக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது.

ஏனெனில் சட்டங்களில் உள்ள நெளிவு சுளிவுகளின் வழியாக மனிதர்கள் தப்பித்து விடவே செய்வார்கள்.
ஆகவே சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் தான் சமூக அவலங்களை நிரந்தரமாக ஒழிக்கும்.

அத்தகைய சுய கட்டுப்பாட்டினையும், ஒழுக்கத்தையும் இஸ்லாம் மனிதனுக்கு தருகிறது.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்கள் அமலில் இல்லாத இந்நாட்டில் வாழ்கிறோம், அதே டெல்லி, கல்கத்தா, மும்பை , பெங்களுர், சென்னை போன்ற நகரங்களில் அரை குறை ஆடை நாகரிக பெண்கள் வலம் வரத்தானே செய்கிறார்கள்.

முஸ்லிம்கள் தவறுகளில் ஈடுபடுகிறார்களா? இல்லையே!!!
இன்னும் சொல்வதெனில் இந்தியாவை விட மிக மோசமான ஆடை குறைப்பு பெண்கள் வாழும் அமெரிக்கா, ஐரோப்பாவில். முஸ்லிம்  ஆண்கள், பெண்கள் ஒழுக்கமாக வாழவில்லையா?

கற்பு என்பதற்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாத நாடுகள் தாம் மேற்கத்திய நாடுகள்

அங்கு முஸ்லிம்களை ஒழுக்கமாக வாழ வைத்துள்ளது எது?
சட்டங்களா? அல்லது ஆடைகளா? இரண்டும் இல்லை

அங்கே இஸ்லாமியர்கள் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் வாழ்வதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

இஸ்லாம் மனிதனின்  அடிமனதில் சுய ஒழுக்கத்தை விதைக்கிறது. சுய கட்டுப்பாட்டுடன் அவனை வாழ வைக்கிறது. அவனது உள்ளத்தை எல்லா வகையான அசுத்தங்களில் இருந்தும் பரிசுத்தப்படுத்துகின்றது. உள்ளம் சுத்தமாகி விட்டால் எல்லாம் சுத்தமாகி விடும்.
  عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ رواه البخاري ومسلم
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(மக்களே!) அறிந்து கொள்ளுங்கள். மனித உடலில் ஒரு சதைப் பகுதி உள்ளது. அது சீரானால் உடம்பின் எல்லா பகுதிகளும் சீராகும். அது சீர்கெட்டுப் போனால் உடலின் எல்லா பகுதிகளும் சீர்கெட்டுப் போகும். அறிந்து கொள்ளுங்கள். அது தான் உள்ளம்.” (நூல்: புகாரி, முஸ்லிம்)

மனிதர்களை இறைவனுக்கு அஞ்சி, மனசாட்சியுள்ள மனிதர்களாக வாழச் செய்யும் மார்க்கம் இஸ்லாமே.
அத்தகைய இஸ்லாம் இந்நாட்டு மக்களின் வாழ்க்கை நெறியாக ஆகாதவரை இந்நாட்டில் குற்றங்களை குறைக்க இயலாது.

இஸ்லாம் வந்து விட்டால் எல்லாம் வந்து விடும்.
கண்ணியமான ஆடை, குற்றங்களை குறைக்கும் வலிமையான சட்டங்கள், இதற்கெல்லாம் அப்பால் மனிதர்களை குற்றங்களில் ஈடுபட விடாமல் தடுக்கும். சுய கட்டுப்பாடு – சுய ஒழுக்கம் இவையும் வரும்
2 Comments

  1. Alhamdu lillah kalathirku yatra poruthamana thalaipi ..jazakallah

    ReplyDelete
  2. இஸ்லாமிய ஆட்சிதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதை சிந்தைக்கு உணர வைக்கும் ஆய்வுரை அருமை.. மவ்லானா அபுல் ஹஸன் ஃபாஸி அவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்ம., நன்றி உங்களின் சேவைக்கு...
    மஅஸ்ஸலாமா. அன்புடன் அபுல் ஹஸன் ஜமாலி, ஈரோடு.

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.