தொடர் (4)
நான் ஏன் முஸ்லிம்
ஆனேன்
மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,
சகோதர மதத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் என்னிடம்
கேட்டார். உங்களின் இஸ்லாமிய மதம் தான் உண்மையானது என்பதற்கு ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா?
நான் சொன்னேன். திருக்குர்ஆனை நீங்கள் படித்துப்
பாருங்கள். திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அது இறைவேதம் என்பதற்கும், இஸ்லாம்
சத்திய மார்க்கம் என்பதற்கும் ஆதாரமாக
திகழ்கிறது. திறந்த இதயத்துடன் அதனை படித்தால் நீங்கள் உணரலாம் என்றேன்.
உண்மையில் திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்.
திருக்குர்ஆன் அது இறக்கியருளப்பட்ட காலம் முதல் இன்று வரை உயிரோட்டமான வேதமாக இருந்து வருகிறது.
அதன் கருத்தில், வாசக நடையில், பொருளில், கோர்வையில்
ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஏராளம்.
சமீப காலத்தில் அப்பட்டியலில் இடம் பிடித்த ஒருவர் இங்கிலாந்து
நாட்டைச் சார்ந்த ஜான் வெப்சட்டர். (John
Webster (1913 – 15 December 2008)
கிறிஸ்தவராக பிறந்த இவர், அப்பொழுது இங்கிலாந்தில்
ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு கிறிஸ்தவம் தீர்வு தராததைக் கண்டு,
கிறிஸ்தவத்தின் மீது வெறுப்புற்று கம்யூனிசத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் கம்யூனிசத்தின் இயல்பை உற்று நோக்கினார். அதன்
உண்மை முகம் அவருக்கு தெரிந்தது. ‘வெறுப்பை மையப்படுத்தி
தன்னை வாழ வைக்கும் கொள்கை’ என்று அதனை புரிந்து கொண்டார்.
ஆண்டான் – அடிமை, ஏழை – பணக்காரர், முதலாளி –
தொழிலாளி என்று மக்களை பிளவுபடுத்தி, இரு தரப்புக்கு மத்தியில் ஒரு வகையான
வர்க்கப் போரை நடத்தும் கொள்கையே கம்யூனிச கொள்கை.
வெறுப்பை இயல்பாக கொண்ட இக்கொள்கையில் நீடித்தால் மன
அமைதி கிடைக்காது. மன வெறுப்பு தான் மிஞ்சும் என்று பயந்தார். விளைவு கம்யூனிசத்தை
விட்டு விலகினார்.
மன அமைதியை மதங்களால் மட்டுமே தர இயலும் என்று நம்பிய
அவர், ஏற்கனவே கிறிஸ்தவ மதத்தின் மீது விரக்தியுற்றதால் ‘அனைத்து
இறைக் கொள்கை ’ (Pantheism -இயற்கையை உள்ளடக்கிய பிரபஞ்சமும் இறைவனும் சமம்.அரபி மொழியில் ‘வஹ்ததுல் உஜுது’ என்று இதற்கு கூறப்படும். ) எனும் கொள்கையில் விழுந்தார்.
இந்நிலையில் திருக்குர்ஆனை படிக்கும்
வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் முதல் அத்தியாயமே அவரை கவர்ந்தது. தொடர்ந்து
படித்தார். இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டார். தமது இறுதிக் காலம்
வரை பிரிட்டன் முஸ்லிம் மிஷன் தலைவராக பணியாற்றிய அவர் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றார்? என்பது குறித்து அவரது
வார்த்தைகளில் தெரிந்து கொள்வோம்.
நான் ஏன்
முஸ்லிமானேன்
புரோட்டஸ்டன்டு கிறிஸ்தவரான ஜான் வெப்சட்டர், தாம்
இஸ்லாத்தை ஏற்றது குறித்து வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இலண்டன் மாநகரில் புரோட்டஸ்டன்டு கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்த நான், அந்த அமைப்பில் தான் வளர்க்கப்பட்டேன்.
1930 ம் ஆண்டு எனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க
ஆண்டு. அப்போது நான் டீன்ஏஜ் வயது மாணவன். இளம் வாலிபர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை நானும் எதிர்கொண்டேன்.
நான் படித்த கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் மதம்
குறித்தும், உலகம் குறித்தும் இரண்டுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் கிறிஸ்தவ
பாணியில் பல தடவை விளக்கித் தரப்பட்டிருந்தது.
எனினும் கிறிஸ்தவத்தின் வழியில் நின்று தரப்பட்ட அவ்விளக்கம்
எனக்கு திருப்தியளிக்கவில்லை
ஏனெனில், இவ்வுலகம் குறித்த கிறிஸ்தவத்தின் கண்ணோட்டம்
குழப்பமானது; இரட்டைத் தன்மை கொண்டது. (dualism)
ஒரு புறம் உலகில் அமைதியான வாழ்க்கை வாழ
வழிகாட்டுவதாக தன்னை அறிமுகம் செய்யும் கிறிஸ்தவம், இன்னொரு புறம் ‘பிறப்பில் இருந்து பாவங்கள் சூழ்ந்த வாழ்க்கை’
எனும் கொள்கையை மனிதர்கள் மீது திணிக்கிறது.
அவ்வாறே இவ்வுலகம் துன்பங்களும், சித்ரவதைகளும்
கொண்டது. இவ்வுலகம் இப்படித்தான் இருக்கும். இதிலிருந்து மனிதர்கள் விடுபட வழியே கிடையாது
என்றும் கிறிஸ்தவம் கூறுகிறது.
சர்ச்சுகளில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பிரச்சாரங்களில் இக்கருத்தே
கூறப்பட்டன.
வாரத்தின் ஆறு நாட்களை மதச்சார்பற்ற நாட்களாக
கழிக்கும் எனக்கு வார ஓய்வு நாளில் இப்பிரச்சாரங்கள் திருப்தியை தரவில்லை.
புரியவும் இல்லை.
இன்னும் சொல்வதெனில், மதத்தின் மீதான எனது பார்வையையே
அவை மாற்றிவிட்டன என்றே கூறலாம்.
இந்நிலையில், அக்காலகட்டத்தில் இங்கிலாந்து நாடு ஒரு
பெரிய பிரச்சினையை எதிர்கொண்டது. பொருளாதார வீழ்ச்சியினால் நாடெங்கும் வறுமை
தாண்டவமாடிய காலம் அது. அச்சமயத்தில் செல்வ செழிப்பில் வாழ்ந்து பழகிய இங்கிலாந்து
மக்கள் மகிழ்ச்சியை இழந்தனர். நாடெங்கிலும் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியினால்
அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இக்கட்டான அக்காலக்கட்டத்தில் அந்நாட்டு மக்கள்
பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த கிறிஸ்தவ மதம் அம்மக்களுக்கு எந்த உதவியையும்
செய்யவில்லை.
பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி, வறுமையை
போக்கவும் இல்லை. அதற்கான தீர்வுகள் எதனையும் அவர்களுக்கு காட்டவும் இல்லை.
ஏற்கனவே அதிருப்தில் இருந்த எனக்கு இது ஆத்திரத்தை
தந்தது. கிறிஸ்தவத்தின் நீதியற்ற இச்செயலினால் இனியும் அம்மதத்தில் நீடிப்பது
அர்த்தமற்ற செயல் என்ற முடிவுக்கு வந்தேன்.
கிறிஸ்தவத்தி்ல் இருந்து விலகிய நான் மற்ற மக்களைப்
போலவே கம்யூனிசத்தில் போய் விழுந்தேன்.
அது ஒரு கம்யூனிச யுகம். உலகம் முழுவதும் கம்யூனிச
அலை அப்பொழுது வீசிக் கொண்டிருந்தது.
பொருளாதாரம் , வேலை வாய்ப்பு குறித்து அதுவரை யாரும்
கேள்விப்பட்டிராத கவர்ச்சியான வார்த்தைகளை அள்ளி வீசி, ஒரு பெரும் இளைஞர்
பட்டாளத்தையே கிறிஸ்தவ இங்கிலாந்தில் கம்யூனிசம் அள்ளிச் சுருட்டி தன்னுள் போட்டுக்
கொண்டிருந்தது.
பொருளாதார வீழ்ச்சியினால் வேலையை மட்டுமல்ல..எதிர்கால
வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே இழந்து நின்ற இங்கிலாந்து மக்கள் தங்களை காப்பாற்ற
வந்த மீட்பராகவே (savior) கம்யூனிசத்தை
பார்த்தனர்.
இளமை வேகம் மற்றும் பருவ உணர்ச்சியினால் உந்தப்பட்டு
கம்யூனிசத்தில் இணைந்த எனக்கு அதனை புரிந்து கொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை.
அது ஒரு வெறுப்பை இயல்பாக கொண்ட கொள்கை. வர்க்க
அடிப்படையில் மக்களை பிளந்து போடும் அது, பிரிவினையின் உறைவிடமாகும்.
“தரத்திலும், செல்வத்திலும் எல்லோரும் சமம்;
அவ்வாறே எல்லா பொருட்களும் எல்லா
நாட்டிலும் சமம்” எனும் கோஷம் வெற்று வார்த்தையாக இருக்க முடியுமே தவிர
எக்காலத்திலும் நடைமுறைக்கு உதவாது. இது யதார்த்த உண்மை. இதனை யோசித்தேன்.
கம்யூனிசத்தின் பொருள்முதல்வாதத்தின் (materialism ) மீது
நம்பிக்கை இழந்தேன்.
கம்யூனிசத்தில் இருந்து விலகிய
பின்பு மதம் மற்றும் தத்துவம் குறித்த படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்தேன்.
அனைத்து இறைக்கொள்கை (Pantheism ) எனும் மத தத்துவ கொள்கையில் இணைந்தேன்.
இவ்விடம் ஓர் உண்மையை
தெரிவித்தாக வேண்டும். மேற்குலகில் வாழும் எங்களுக்கு ‘முஸ்லிம்களுடன் பழகுதல்’
என்பது கடினமான விஷயம் தான். ஏனெனில், பாலர் பருவத்தில் இருந்தே இஸ்லாம் பற்றி எங்களுக்கு
கரடு முரடான செய்திகளே சொல்லித் தரப்பட்டுள்ளன.
பொதுவாக ஐரோப்பியர்கள் இஸ்லாம்
என்றாலே அது பற்றி எதுவும் தெரியாமலே உடனே மறுத்து விடுகிறார்கள். அஃது அவர்கள்
பள்ளிப் பருவத்திலேயே இஸ்லாம் என்றாலே வன்முறை என்று கற்றுத்
தரப்பட்டிருந்தார்கள். அதைத் தவிர இஸ்லாம் குறித்து வேறெதுவும் அவர்களுக்கு
தெரியாது.
அது ஒரு பழைய பகை. சிலுவைப்
போர்கள் காலம் முதல் இன்று வரை அது தொடரவே செய்கின்றது. சப்தமின்றி நடந்து வரும்
அதனை சதி என்பதா? அல்லது தவறு என்பதா?
இந்நிலையில், அலுவலக வேலை
தொடர்பாக ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றேன். அத்துடன் படிப்பு தொடர்பாக இஸ்லாம்
குறித்தும் நான் தெரிந்த கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக அந்நாட்டின் தலைநகர்
சிட்னி –இல் உள்ள ஒரு பொது நூலகத்துக்கு சென்றேன். திருக்குர்ஆன் ஆங்கில
மொழிபெயர்ப்பு ஒன்றினை வாங்கி முதலில் முன்னுரையை படிக்கத் தொடங்கினேன்.
முன்னுரையை படிக்க படிக்க
திருக்குர்ஆன் அத்தியாயங்களை வாசிக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது.
அந்தளவுக்கு அம்முன்னுரையில் திருக்குர்ஆனுக்கு எதிராக எழுதப்பட்டிருந்தது.
இது என்ன ஆச்சரியம்! ஒரு நூலின்
முன்னுரையில் அந்நூலுக்கெதிரான கருத்துக்களா? மொழிபெயர்ப்பாளர் யார்? என்று உற்று
நோக்கினேன். கிறிஸ்தவர் பெயர் போடப்பட்டிருந்தது.. படிப்பதை நிறுத்தினேன். நூலை
எடுத்த இடத்தில் உடனே வைத்தேன்.
பின்பு மேற்கு ஆஸ்திரேலியாவில்
உள்ள பெர்த் (Perth) நகரில் இரண்டு வார காலம் தங்க நேர்ந்தது. அக்காலகட்டத்தில்
அங்குள்ள நூலகம் சென்று திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பினை பொறுப்பாளரிடம் கேட்டேன்.
என்னிடம் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதி ஒன்றினை தந்தார். வாங்கியவுடன் அதன்
மொழிபெயர்ப்பாளர் முஸ்லிமா? என்று தான் பார்த்தேன். ஆம். முஸ்லிம் பெயர் தான்
போடப்பட்டிருந்தது.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான சூரா ஃபாத்திஹா அத்தியாயத்தை
படித்தேன்.
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம். படைத்த ஏக இறைவன் அல்லாஹ் தன்னை
ரஹ்மான், ரஹீம் (மிக கருணையாளன், மிக மிக கருணையாளன் ) என்று குறிப்பிடுவதை
பார்த்து பூரித்துப் போனேன்.
கருணையாளன் அல்லாஹ் மனிதனை பாவக்கறை படிந்தவனாக நிச்சயமாக
படைத்திருக்க மாட்டான் என எனது உள்ளம் கூறியது.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (எல்லா புகழும் எல்லா மக்களின்
இறைவன் அல்லாஹ்வுக்குரியது) என்று தொடங்கி “ நேரான பாதையை எங்களுக்கு காட்டுவாயாக!
என்று பிரார்த்தனையாக முடியும் ஏழு வசனங்களையும் படித்து முடித்த சமயத்தில்
என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
தொடர்ந்து நூலகம் மூடப்படும் நேரம் வரை படித்துக் கொண்டே இருந்தேன்.
வீட்டுக்கு வந்த பின்பு எனக்குள் சொல்லிக் கொண்டேன். “நான் எனது இலட்சியத்தை எட்டி
விட்டேன் . இப்போது நான் முஸ்லிமாகி விட வேண்டும்.”
இதற்கிடையே யாரும் என்னிடம் வந்து தஃவா பிரச்சாரம் செய்யவே இல்லை.
அல்லாஹ் தான் இந்த எண்ணத்தை தந்தான்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலின் சுவற்றில் திருக்குர்ஆனின்
வசனமொன்று எழுதப்பட்டிருந்தது. அதனைப் பார்த்தவுடன் எனக்கு சுருக்கென்றது.
நேரான வழி எது? என்று தெரிந்த பின்பும் அதை ஏற்காமல் தாமதிப்பது
எவ்வளவு பெரிய தவறு?
உடனே பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். கலிமா கூறி முஸ்லிமானேன்.
முஸ்லிமான பின்பு முஹம்மது ஜான் வெப்சட்டர் என்று பெயர் மாற்றிக்
கொண்ட இவர் 2008 ம் தான் காலமாகும் வரை
இங்கிலாந்து முஸ்லிம் மிஷன் தலைவராக பணியாற்றினார். அன்னாரை அல்லாஹ் பொருந்திக்
கொள்வானாக!
குறிப்பு : இத்தொடர்
பத்திரிக்கையாளர் மு.குலாம் முஹம்மது அவர்கள் நடத்தும் ‘வைகறை வெளிச்சம்’ முஸ்லிம்
மாத இதழில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது.