நான் ஏன் முஸ்லிமானேன் 
                                           தொடர் (2)

‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்முஸ்லிம்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத திரைப்படம்.

கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகை உலுக்கி எடுத்த திரைப்படம்.

உயிருக்கு உயிராக உயிரினும் மேலாக முஸ்லிம்கள் மதித்து போற்றிடும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படமே அத்திரைப்படம். அப்படத்தினால் இஸ்லாமிய உலகம் கொந்தளித்தது.

முஸ்லிம் உலகில் ஏற்பட்ட எதிர்ப்பலையில் 75 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் , சிறுபான்மையாகவும் வாழும் நாடுகளில் நடந்த உணர்ச்சி மிக்க போராட்டங்கள் முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.

முன்னொரு முறை 2001 ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட சமயத்தில் முஸ்லிம்கள் மீது பழி போட அமெரிக்க உளவுத்துறை ஒரு நரித்தனம் செய்தது. அது தாக்குதல் நடத்தியவர்கள் விட்டுச் சென்றதாக ஒரு காரை ஏற்பாடு செய்து அதில் திருக்குர்ஆனை விரித்து வைத்திருந்த நிகழ்வாகும்.

ஆனால் வல்லோன் அல்லாஹ் அந்த அவதூறை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றினான். அமெரிக்கர்கள் எல்லோரையும் திருக்குர்ஆன் சென்றடைந்தது. அல்லாஹ் நாடிய பலர் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

அவ்வாறே இத்திரைப்படத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களும், எதிர்ப்புகளும் அதுவரை இஸ்லாத்தின் மீதும் , முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் காழ்ப்புணர்வுடன் செயல்பட்டு வந்த பலரை சிந்திக்க வைத்தன.

இஸ்லாம், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாறு, அன்னாரின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் பாசம், முஸ்லிம்களின் சர்வதேச ஒருமைப்பாடு போன்றவை குறித்து யோசிக்க வைத்தன.

அவ்வாறு யோசித்துப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்களில் ஒருவர் தான் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அர்னாடு வேன் டூன் (Arnoud van doorn)

அர்னாடு வேன் டூன் (Arnoud van doorn)


நமது இந்திய தேசத்தில் உள்ள பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் போன்று இஸ்லாமிய எதிர்ப்பை கட்சியின் கொள்கையாக கொண்டு நெதர்லாந்து நாட்டில் செயல்படும் கட்சி ‘தீவிர வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு சுதந்திர கட்சி’ (Geert Wilders's far right-wing anti-Islam Freedom Party)

அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்து திரைப்படம் எடுப்பது, கார்ட்டூன் வரைவது ஆகியன சமீபகால ஐரோப்பிய கிறிஸ்தவ உலகம் செய்துவரும் காழ்ப்புணர்வு காரியங்கள். இது உலகறிந்த உண்மை.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எதிர்ப்பதை இலட்சியமாக கொண்டு நெதர்லாந்தில் செயல்பட்டு வரும் இக்கட்சியும் இத்தகைய திரைப்படம் ஒன்றினை டச்சு மொழியில் தயாரித்து தமது அரிப்பினை தீர்க்க தவறவில்லை.

இஸ்லாத்தின் மீது இத்துணை காழ்ப்புணர்வுடன் செயல்பட்டு வரும் இக்கட்சியின் சார்பில்  நெதர்லாந்து பாராளுமன்றத்துக்கு உறுப்பினராகவும், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹாக் (Hague) மாநகராட்சியில் கவுன்சிலராகவும் பதவி வகித்தவர் அர்னாடு வேன் டூன் (Arnoud van doorn)

அர்னாடு தமது வாழ்நாளின் பெரும் பகுதியை இஸ்லாத்தை எதிர்ப்பதில் தான் கழித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் வெளிவந்தது.

அப்படத்திற்கெதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்தார்கள்.  பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இப்போராட்டங்கள் அர்னாடை சிந்திக்க வைத்தன. ஒருவர் இறந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் அவர் மீது இத்துணை மில்லியன் மக்கள் மரியாதை வைத்துள்ளார்களா?

அவர் எவ்வளவு மரியாதைக்குரியவராக இருக்க வேண்டும்?

அவர் போதித்த மார்க்கம் எவ்வளவு உயர்ந்த கொள்கையாக இருக்க வேண்டும்?

இத்துணை மகத்தான மனிதரையா நாம் பகைத்து வாழ்ந்தோம்.?

அவரை இழிவாக சித்தரித்து திரைப்படம் தயாரித்த கட்சியிலா நாம் இருக்கிறோம்.?

பல நாட்கள் சிந்தித்தார். விளைவு கட்சியை விட்டு ஒதுங்கினார். பின்னர் விலகினார்.

தொடர்ந்து இஸ்லாத்தை ஆய்வு செய்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அதிகமதிகம் படித்தார். முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் தெரிந்து கொள்ள தன்னுடன் ஹாக் மாநகராட்சியில் பணியாற்றிய சக முஸ்லிம் உறுப்பினர்களிடம் பழகினார்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார். இனியும் தாமதிப்பதில், யோசிப்பதில் அர்த்தமில்லை என்று.

ஹாக் நகரில் உள்ள ‘மஸ்ஜிதுஸ் சுன்னா’ இறையில்லத்துக்கு சென்றார். அப்பள்ளிவாசல் இமாம் ‘பவாஸ் ஜுனைத்’ அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்றார்.

இதற்கு முன்னர் பவாஸ் ஜுனைத் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அவரது கட்சி பெரிய அளவில்  வேலை செய்தது நினைவு கூறத்தக்கது.

நான் ஏன் முஸ்லிமானேன்?

இவ்வாண்டு (2013) பிப்ரவரி 27 ந்தேதி தமது ட்விட்டர் வலை தளத்தில் ஷஹாதத் கலிமாவை பதிவு செய்து, தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வெளியுலகுக்கு அறிவித்தார் அர்னாடு.

தாம் இஸ்லாத்தை ஏற்றது குறித்து தமது வலைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது;

“ நான் எனது வாழ்க்கையில் பல தவறுகளை செய்துள்ளேன். அந்த தவறுகள் எனக்கு பல பாடங்களை தந்துள்ளன. இஸ்லாத்தை எதிர்த்தே வாழ்நாளின் பெரும் பகுதியை நான் கழித்தேன். ஆனால் இஸ்லாம் தான் எனக்கு நிம்மதியை தந்துள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின்பே உண்மையான வழி எனக்கு கிடைத்தது.

இப்போது நான் நம்புகிறேன். இப்புதிய தொடக்கம் எனக்கு நல்லவிதமாகவே அமையும். அத்துடன் எனது இம்முடிவு பலத்த எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

நிச்சயமாக அல்லாஹ்வின் எல்லா வகையான உதவிகளும் எனக்கு கிடைக்கும். எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன் இன்ஷா அல்லாஹ்..”

இவ்வாறு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த அவர் கடந்த ஏப்ரல் 20 ந் தேதி மதீனா வந்தார். மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு வந்த அவர், தொழுகைக்கு பின்பு அண்ணல் நபி (ஸல்) அவர்களை புனித ரவ்ளாவில் ஸியாரத் செய்தார்.

அண்ணலாரின் ரவ்ளாவில் நிற்கும் பொழுது கடந்த காலத்தில் அண்ணல் நபி (ஸல்) ஐ திட்டியது, அவர்களை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட படத்திற்கு உதவியது போன்ற தமது தவறுகளை நினைத்து கடுமையாக அழுதார் அர்னாடு. (சவூதியின் பிரபல ‘உக்காள்’ அரபி நாளிதழ் இதனை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தது.)

மஸ்ஜிதுன் நபவீ இன் இமாம்களான ஷெய்கு ஸலாகுல் பதீர், ஷெய்கு அலீ அல்  ஹுதைஃபீ ஆகியோரை சந்தித்த அவர், ‘உக்காள்’ அரபி நாளிதழுக்கு பேட்டியளித்தார். அவரது பேட்டி பின்வருமாறு:
“ கடந்த காலத்தில் இஸ்லாத்தின் மீது கடும் பகைமை கொண்டிருந்த கட்சியில் என்னை நான் இணைத்திருந்தேன். எனது உள்ளத்திலும் பகைமையே நிலவியது.

‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படத்திற்கெதிராக உலகெங்கும் நடந்த போராட்டங்கள் என்னுள் பல வினாக்களை எழுப்பின. அவை இஸ்லாம், முஸ்லிம்கள் தங்களின் மார்க்கம் மற்றும் இறைத்தூதரின் மீது வைத்திருக்கும் மரியாதை ஆகியவை குறித்த கேள்விகளாகும்.

விடை தேடினேன். சிந்தித்தேன். இஸ்லாம் குறித்து படிக்கத் தொடங்கினேன்.

படிப்பதில் நான் நுனிப்புல் மேயவில்லை. இறுக்கமான இதயத்துடனும் படிக்கவில்லை. மாறாக அகன்ற நெஞ்சுடனும், தெளிவான சிந்தனையுடனும் ஆழமாக இஸ்லாத்தை படித்தேன்.

அதுவரை முஸ்லிம்களை காழ்ப்புணர்வு கண்கொண்டு பார்த்து வந்த நான் அவர்களுடன் நெருங்கிப் பழகினேன்.

எனது இதயத்தை அல்லாஹ் திறந்தான். இஸ்லாத்தை ஏற்றேன். அல்லாஹ் நிறைவானவன்.

இஸ்லாத்தை ஏற்ற பின்பு உம்ரா செய்ய முடிவு செய்தேன். எனினும் உம்ராவுக்கு முன்பு மதீனா வந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஸியாரத் செய்ய முடிவு செய்தேன்.

ஏனெனில், கடந்த காலத்தில் நான் அவர்களை அதிகமதிகம் அவதூறாக பேசியுள்ளேன். (இதை கூறிய போது அர்னாடு கடுமையாக அழுதார்.) இப்பொழுது நான் இஸ்லாத்தை ஏற்றதற்கும் அவர்களே காரணம்.

உம்ராவை முடித்த பின்பு மீண்டும் மதீனா வருவேன். என்றாலும் மதீனா நகரை பிரிவது மிகவும் துயரமாக உள்ளது.

இன்ஷா அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்த உன்னத தகவல்களுடன் ஒரு சிறந்த படமொன்றை இயக்கி, அதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வேன்.”

அன்று பிற்பகலில் உம்ரா செய்ய மக்கா நகருக்கு சென்ற அர்னாடு, அங்கு புனித மஸ்ஜிதுல் ஹராம் இன் இமாம்களில் ஒருவரான இஸ்லாமிய இலட்சியவாதி அப்துர் ரஹ்மான் சுதைஸி அவர்களை சந்தித்து அறியாமைக் காலத்தில் தான் தவறு செய்து விட்டதாகவும், அதற்கு பரிகாரமாக தனது வாழ்நாள் முழுவதும், இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபடபபோவதாகவும் தெரிவித்தார்

அவருக்கு திருக்குர்னை பரிசாக தந்த சுதைஸி, இனிவரும் வாழ்நாளை திருக்குர்ஆனின் வழியில் அமைத்துக் கொள்ளுமாறு கூறினார்.

தகவல் : உக்காள் அரபி நாளிதழ் (சவூதி)
           தாருல் அக்பார் அரபி நாளிதழ்               (சவூதி)
           அஹ்ராம் அரபி நாளிதழ் (எகிப்து)
           ஹுர்ரிய்யத் ஆங்கில நாளிதழ் (துருக்கி)
           அர்னாடு - ட்விட்டர் வலைப்பக்கம்


கட்டுரையாளர் : மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.



















One Comment

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.